Asianet News TamilAsianet News Tamil

மோடியை மோசமாக விமர்சித்ததால்... தொடரும் அதிரடி கைது! சிக்கியவர் ஒரு சிஆர்பிஎஃப் ஜவான்!

crpf jawan arrested in jorhat for social media posts against narendra modi and rajnath singh
crpf jawan arrested in jorhat for social media posts against narendra modi and rajnath singh
Author
First Published Oct 16, 2017, 4:56 PM IST


பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை மோசமாக விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து பரப்பிய சி.ஆர்.பி.எஃப் படை வீரர் ஒருவர் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்ட போலீஸார், சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைப் பற்றி மோசமாகக் குறிப்பிட்டு எழுதிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் மிஸ்ரா என்ற மத்திய பாதுகாப்புப் படை வீரரைக் கைது செய்தனர். 

அவர் பேஸ்புக் சமூக ஊடகம் மூலமாக ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜோர்கட் முகாமில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதற்கு, சி.ஆர்.பி.எப் வீரர்களின் நலன் சார்ந்து தான் முன் வைத்த கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்றும், படை வீரர்களை மேலதிகாரிகள் தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவதாகவும் புகார் கூறி பதிவிட்டிருந்தார்.  

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தான் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில், பங்கஜ் மீது பட்டாலியன் கமாண்டர் பி.பெஹ்ரா போலீஸில் ஒரு புகாரை அளித்தார்.  அவரது புகாரின் அடிப்படையில், ஜோர்ஹட் காவல்துறை பங்கஜை ரௌரியா சி.ஆர்.பி.எப் முகாமில் வைத்து கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப் பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பங்கஜ் தற்பொழுது நீதிமன்றக் காவலில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஜோர்ஹட் காவல்துறை கண்காணிப்பாளர் பூயன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக துர்காபூர் சிஆர்பிஎஃப் முகாமில் பணிபுரிந்து வந்தார்  பங்கஜ். அப்போது சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவரது உறவினரான அபய் குமார் என்பவரும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். இதனால் கோபமுற்ற பங்கஜ் குமார், அதுகுறித்து விமர்சனம் செய்து, தனது பேஸ்புக் பதிவுகளில் வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். அங்கே ஏற்பட்ட சூழ்நிலையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சரியாகக் கையாளவில்லை என்று அவர் குறித்தும், நாட்டில் தைரியம் மிகுந்த அரசியல் தலைமை இல்லை என்று பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து  பதிவிட்டிருந்தார். 

பங்கஜ் குமாரின் இந்தப் பதிவுகள் அப்போது வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios