கடை திறப்பு விழா என்றாலே அதிரடியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இலவசங்களையும் சலுகைகளையும் கடைகள் அறிவிப்பது வழக்கமான ஒன்று தான். தற்போது சலூன்கடைகள் திறப்பு விழா கண்டாலே சலுகைகள் அறிவிக்கும் அளவிற்கு மக்கள் இலவசம் மற்றும் சலுகைகளுக்கு மண்டிட்டு காத்திருக்கிறார்கள் என்றால் அதை மறுக்க முடியாது.அதற்கு சான்று தான் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்த கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடை திறப்பு விழா சலுகையாக ரூ.10 நாணயம் கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என சலுகை அறிவிக்கப்பட்டது.இதனால், மக்கள் கொரோனாவையும் மறந்து 10 ரூபாய் நாணயத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் கடை முன்பு திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பிரியாணிக்காக தனிநபர் இடைவெளியை காற்றில் பறக்க விட்ட மக்கள் கூட்டத்தை போலீசார் கலைத்தனர். மேலும், சலுகை அறிவித்து மக்களை கூட்டத்தை திரட்டிய கடையின் உரிமையாளர் மீது, தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.