குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. எடப்பாடி துரோகம் எல்லோருக்கும் தெரியும். ரவுண்டு கட்டி அடித்த ஸ்டாலின்.
எடப்பாடி பழனிச்சாமியின் துரோகங்களும் தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் துரோகங்களும் தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கான தண்டனையாகத் தான் கடந்த தேர்தல் மூலம் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளதாக அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்
இச்சம்பவத்தை பொறுத்தவரையில் 17 காவல்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் போன்று எதிர்காலத்தில் ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு பரிந்துரைகளை அந்த ஆணையும் முன்வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: 13 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற மிருகத்தனம்.. அதிமுக அரசின் தலைமைச் செயலாளரை விடாதீங்க.. கொதிக்கும் எஸ்டிபிஐ.
தற்போது அந்த ஆணையத்தின் அறிக்கையை பல அரசியல் கட்சிகளும் வரவேற்று வருகின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன, முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு கூட்டு சதி என்றும், சிபிஐயிடம் உள்ள வழக்கு விசாரணையைத் திரும்பப் பெற்று மாநில அரசை விசாரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதே போல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சமரசமின்றி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கை மீது விவாதம் நடைபெற்ற நிலையில், எம்எல்ஏக்களின் கருத்துக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி, துயரமான அச்சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.
மக்களின் மரண ஓலம் இன்றும் என் மனதை வாட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் துரோகங்களும் தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இதற்கான தண்டனையைத்தான் கடந்த தேர்தல் மூலம் அதிமுகவுக்கு மக்கள் வழங்கினார்கள். ஒரு ஆட்சி நிர்வாகம் எப்படி நடைபெறக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.
அதிகாரமும் சட்டமும் மக்களை காக்கவே என அனைவரும் உணர வேண்டும். யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.