கடந்த 8 ஆம் தேதி துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த பட்ஜெட்  மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.  

நேற்று முதல் நாள் விவாதத்தின் போது பேசிய செம்மலை எம்.எல்.ஏ. பொங்கல் பரிசாக அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் முதல் சிக்ஸரை அடித்தார். பின்னர் ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி வழங்கி இரண்டாவது சிக்ஸர் அடித்தார். அடுத்து மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டு ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்கப் போகிறார் என தெரிவித்தார்.

இன்று 2 வது நாள் விவாதத்தின்போது பேசிய  திமுக எம்எல்ஏ பொன்முடி, ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக ஆட்சி "கிளீன் போல்டு" ஆகும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ஸ்டாலின் வீசும் பந்து "நோ-பால்" ஆகும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, "மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மைதானத்திற்கு உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

தொடர்ந்து உறுப்பினர்கள் கிரிக்கெட் தொடர்பான வார்த்தைகளை பேசி அவையை சிரிப்பலையில் ஆழ்த்தினர்.