சைபர்கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்... காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று (5.3.2023) மதுரை மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தொழிற் சங்கங்கள், சிறு மற்றும் குறுந்தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: நீங்கள் எங்கு சென்றாலும்.!! பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
பின்னர் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைப் பொருத்தவரை தென்மாவட்டங்களில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது மிக மிக முக்கியமான பணியாகும். தென்மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை உயர் அலுவலர்களாகிய நீங்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி சட்டம் ஒழுங்கினை சீராக பராமரிக்கவேண்டும். காவல்துறை அலுவலர்கள் தடுப்புப் பணிகள், ரோந்து பணிகள் ஆகிய அடிப்படைக் காவல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அதனை குறைக்க முடியும் என்பதையும் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: வட மாநிலத்தவர்கள் குறித்து வதந்தி... இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!
சைபர் கிரைம் குற்றங்களுக்கு காரணமானவர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது உங்கள் கடமை. இவ்வகை குற்றங்களில் பெரும்பாலும் ஏமாற்றப்படுவது எளிய, நடுத்தர வர்க்கத்து மக்கள். ஆகவே, தொழில்நுட்ப பிரிவுகளின் திறனைக் கூர்மைப்படுத்தி இதனை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அடுத்தபடியாக, சமூக ஊடகங்கள் மூலமாக சாதி மோதல்களைத் தூண்டும் வகையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அத்தகைய எண்ணங்களைத் தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ்ஆப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் உங்கள் பகுதிக்குள் சாதி ரீதியான உரசல்களோ, பிரச்சனைகளோ, ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.