ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..! பாராட்டு தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ததற்கு மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிர்ப்பு
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தில் ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து உள் அரங்கத்தில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்க மறுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் 3 தேதிகளில் ஒரு தேதியில் பேரணி நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் எனவை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என சி.பி.ஐ(எம்) கோரியது. தற்போது தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.
தமிழக அரசுக்கு பாராட்டு
மக்களிடையே வெறுப்பினை பரப்பி, மோதலை உருவாக்கும் சக்திகளை ஜனநாயக இயக்கங்களைப் போல கருத முடியாது. வெறுப்பு அரசியலையே தனது திட்டமாக வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கடந்த கால/தற்போதைய செயல்பாடுகளை கணக்கில் கொண்டுதான் அவர்களின் பேரணிக்கு அனுமதி கூடாது என்கிறோம்.இவ்விசயத்தில், குறிப்பாக சட்டம் ஒழுங்கு சார்ந்த விசயங்களை உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசாங்கம் மேல்முறையீடு செய்திருப்பது சரியானது. பாராட்டுக்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்