தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கையையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாகச் செயல்பட ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா உள்ளிட்டவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழகச் சட்டமன்றத்தைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணை வேந்தர் நியமன பிரச்னை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளினால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அந்த அறிக்கையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக நீட் விலக்கு மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தார். இதை அடுத்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். எனினும், மசோதா தொடர்பாக எந்த விளக்கமும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியாகவில்லை. இதனிடையே நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

மேலும் இதுக்குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவு எண்.43/2021-யையும், இந்த சட்ட முன்வடிவுக்கு அடிப்படையாக இது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையையும் விரிவாக ஆய்வு செய்த பின்னரும், மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வுக்கு முந்தைய சமூகநீதி நிலையைக் குறிப்பாக, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நிலையை ஆய்வு செய்த பின்னரும், இந்த சட்ட முன்வடிவு, இம்மாநிலத்திலுள்ள மாணவர்களின் குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் கருதுகிறார். எனவே, இச்சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவரின் விரிவான விளக்கங்களுடன் அவையின் மறுபரிசீலனைக்காக தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆளுநரின் இதுபோன்ற செயல்களை காரணம் காட்டி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
