cpm general secretary setharam yechury elected once again

ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 18-ந்தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்தது.

இந்த மாநாட்டில் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான பட்டியலில் தற்போதைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தவிர, திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பிருந்தா கரத், செயலாளர் பி.பி.ராகவலு ஆகியோருடைய பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.



சீதாராம் யெச்சூரி பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் நேரடியாக தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டியதால் கட்சியில் அவருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இதனால் அவரை 2-வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் தயக்கம் காட்டினர். குறிப்பாக முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த கட்சியின் 21-வது மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, நினைவு கூரத்தக்கது.

மாநாடு நிறைவடைந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி , நாடாளுமன்ற தேர்தலின்போது மாநிலங்களின் கள நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்கும். காங்கிரசுடன் கூட்டணி கிடையாது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும், உள்ளேயும் வெளியேயும் வகுப்புவாத சக்திகளை தடுத்து நிறுத்த ‘புரிந்துகொள்ளல்’ அடிப்படையில் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.