100 செமீ மழை வரும் என்ற தகவல் நிர்மலாவுக்கு தெரிந்திருக்கலாம், அவர் தமிழக அரசிடம் சொல்ல வேண்டியது தானே-சிபிஎம்
இயற்கை இடர்பாட்டில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது. வெந்து, நொந்து போயிருக்கும் மக்களை மேலும் நோகடிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி உள்ளார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு
தமிழகத்தில் வட மற்றும் தென் மாவட்டங்களை வெளுத்து வாங்கிய மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லையென குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சென்னையில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்குள் தென்மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இன்னமும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. தண்ணீர் வடியவில்லை. வாழை, நெல் கடும் சேதம். கால்நடைகள் அதிகம் இறந்துள்ளன.தமிழக அரசு, இரவு , பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிர்மலா வந்தாரா.?
அரசு போராடிக் கொண்டிருக்கும்போது, உதவி செய்ய வேண்டிய மத்திய அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது. நிர்மலா சீதாராமன், தமிழக அரசு எதையுமே செய்யவில்லை என்பது போல் பேசி உள்ளார். எத்தனை பாஜக தலைவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தனர்? நிர்மலா சீதாராமன் வந்தாரா? 100 செ.மீ., மழை வரும் என்ற தகவல் நிர்மலாவுக்கு தெரிந்திருக்கலாம். அவர், தமிழக அரசிடம் சொல்ல வேண்டியது தானே. உள்நோக்கத்துடன் நிர்மலா பேசி உள்ளார்.இந்த வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுக்கவில்லை. ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை. டில்லியில் உட்கார்ந்துகொண்டு கண்டபடி பேசியது சரியல்ல. நிர்மலா சீதாராமன் பேச்சு கண்டிக்கதக்கது.
உடனடியாக நிவராண நிதியை கொடுங்கள்
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும். பணம் கொடுக்காமல், விதண்டாவாதம் செய்கின்றனர். மக்களுடன் விளையாட வேண்டாம். தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்திருக்கிறார். அவருக்குள்ள அக்கறை கூட, மத்திய அரசுக்கு இல்லையென பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்