மத்திய அரசு அகந்தையோடு செயல்படக் கூடாது. உடனடியாக குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“குடியுரிமைச் சட்டம் முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், ஏழைகள் என அனைவருக்குமே எதிரான சட்டம். டெல்லி கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும். கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக அமைச்சர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதிக்க வேண்டும். ஆனால், அரசு இதைப் பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை.
மத்திய அரசு அகந்தையோடு செயல்படக் கூடாது. உடனடியாக குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும். மோடி அரசு பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என மோடி சொன்னார். ஆனால், அதைப்பற்றிப் பேச அவர் மறுக்கிறார். 
விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் சொன்னார். ஆனால், விவசாயிகளின் தற்கொலைகள்தான் அதிகரித்துள்ளது. மோடி அரசு, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்கும் முயற்சிகளை எடுக்கவில்லை. மாறாக, மக்களை பிளவுபடுத்தும் வேலையைச் செய்துவருகிறது” என டி.ராஜா தெரிவித்தார்.