ஒருபுறம் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில் ,  மறுபுறம் அதைவிட பல மோசமான விளைவுகளை நாடு சந்தித்து வருகிறது இதில் மத்திய அரசு கவனம் செலுத்த தவறி விட்டது  என பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.  அதன் விவரம் துர்திருஷ்டவசமாக சமூக ஊடகத்தில் மீண்டும் உங்களுக்கு கடிதம் எழுதிய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது , முற்றிலும் ஒரு தயார்நிலையில் இல்லாதிருந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது ,சமூக முடக்கத்திற்கு பின்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் அனைத்து விதமான வாழ்வாதாரங்களையும் தங்கும் இடத்தையும் இழந்ததன் விளைவாக தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முயன்றதன் காரணமாக வீதிகளில் கூட்டம் கூட்டமாக கூடியதால் ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்கிற சமூக முடக்கத்தின் குறிக்கோளே அங்கு மறுதளிக்கப்பட்டது , 

 

அதன்பின்னர் பசி பஞ்சம் பட்டினி நிலைக்கும் மற்றும் தங்க இடமில்லாத  நிலைக்கும் அது கோடான கோடி மக்களை தள்ளியுள்ளது .  பல கோடி மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றனர் .  ஆனால் மத்திய அரசின் கிடங்குகளில் மிகப்பெரிய அளவில் உணவு தானியங்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன ,  அவற்றை தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்வதற்காக மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினோம்,  ஆனால் அதை மத்திய அரசு பரிசீலனை செய்யவே இல்லை . சமூக முடக்கத்திற்கு பின்னர் 340 லட்சமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை  880 லட்சமாக அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது .  அதாவது பிப்ரவரி க்கும் ஏப்ரலுக்கு மிடையே 540 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அது மெல்ல மெல்ல அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் 12 கோடியே 20 லட்சம் பேர் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர்.

சமூக முடக்க காலத்தையும் சேர்த்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் 20 வரைக்கும் வேலையின்மை விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 23.6 சதவீதமாக அதிகரித்திருக்கிறது ,  இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் ரொக்கம் அவற்றுக்கு வங்கிக்கணக்கில் உடனடியாக செய்திட வேண்டும் எனக் கூறினோம் ,  அதையும் செய்யவில்லை .  ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 7.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி தள்ளுபடி செய்யும் வல்லமை பெற்ற உங்கள் அரசுக்கு  மக்களுக்கு உணவு அளித்து பாதுகாத்திட பணம் இல்லை என்று சொல்லமுடியாது .கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க அதே சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்று அல்லாத விதத்திலும் ஏராளமான அளவிற்கு மரணங்கள் ஏற்பட்டிருப்பதை மத்திய அரசு பார்க்க தவறிவிட்டது.

 

கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளும் பல லட்சம் கர்ப்பிணி பெண்களும் அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு தேவையான தடுப்பூசிகள் அளிக்கப்படாமல் அவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதாக  மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து வாரங்களில் மலேரியா மற்றும் காச நோய் ஒழிப்பு திட்டங்களை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன ,  புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளும் 3.5 இலட்சத்துக்கும் அதிகமான சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளான நோயாளிகளும் தேவையான சிகிச்சை பெற முடியவில்லை .  அதேபோல் ரத்த சேமிப்பு வங்கிகளிடம் போதிய அளவு ரத்தம் இல்லை .  இது போன்ற நிலைமைகளை ஏற்கமுடியாது உடனே அரசு இதை சரி செய்ய வேண்டும் .  அதேபோல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை  விமானம் அனுப்பி அழைத்து வந்த அரசு நாட்டுக்குள்ளேயே ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை .  அவர்களுக்கு  சிறப்பு விமானங்கள் வேண்டாம் குறைந்தபட்சம் சிறப்பு ரயில்கள் ,  பேருந்துகள் இயக்கினார் போதும் என அவர் வலியுறுத்தியுள்ளார் .