ஆரோக்கிய வாழ்வின் பேரிடரான கொரானா வைரஸ் நோய் தொற்று மக்களிடம் உருவாக்கியுள்ள அச்சம், பயம் போன்ற உணர்வுகளைப் பயன்படுத்தி ‘கைதட்டுங்கள்’, ‘விளக்கு ஏற்றுங்கள்’ என்று மக்களின் உணர்ச்சிகளை உசுப்பித் தூண்டி திசைதிருப்பும் மலிவான செயலில் ஈடுபடுவதை நாட்டின் பிரதமர் உடனடியாக கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணொளி மூலம் இன்று பேசிய பிரதமர் மோடி,  “ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது” என்று  தெரிவித்தார். மேலும், "வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்" என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், கொரானா தடுப்புக்கு அறிவியல்பூர்வமாக செயல்படுங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க நாடு முழுவதும் முடக்கப்பட்டு 10 நாட்கள் ஆகின்றன. இன்னும் 11 நாட்களை கடந்துசெல்ல வேண்டும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள காட்சி ஊடகச் செய்தியில் “வரும் ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் உள்ள விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி 9 நிமிடங்கள் எரிய விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


கொரானா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கும், அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பிரதமர் விளக்கு ஏற்றச் சொல்லி இருப்பதற்கும் என்ன அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை பிரதமர் விளக்கியிருக்க வேண்டும். முன்னதாக, மக்கள் ஊரடங்கு தினத்தில் கொரானா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை ஊக்கப்படுத்த கைதட்டுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, மருத்துவர்கள் எங்கள் மருத்துவ சேவைக்கு தேவையான கருவிகளையும், மருந்துகளையும் வழங்குங்கள். அவைதான் உடனடித் தேவை. ‘கை தட்டல்’ அல்ல என்று கூறினார்கள். கொரானா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் சங்கிலித் தொடரைத் துண்டிக்க ‘சமூக இடைவெளி நிறுத்தல்’ நடவடிக்கை அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படும் என பிரதமர் தொலைகாட்சியில் அறிவித்தார். இந்த முடக்க காலத்தில் நாட்டு மக்களில் 10 சதவீதம் பேர் குடிசைகளில் வசிக்கிறார்கள். புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் தெருவில் தூங்குகிறார்கள்.

 
மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் 93 சதவீதம் பேர் எந்த சட்டப் பாதுகாப்பும், சமூக உதவிகளும் இல்லாத அமைப்புசாராத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இந்தப் பெரும் பகுதியினர் அன்றாடம் உயிர் வாழ உணவுக்கு அலைந்து திரியும் அவல நிலையில் வாழ்கிறார்கள். பட்டினி நிலை வாழ்க்கை வாழும் இவர்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் காலத்தில் உணவுக்கு என்ன செய்வார்கள்? இவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் எப்படி வழங்குவது? கொரானா நோய் தொற்று தடுப்பு கருவிகள் மருந்துகள் எங்கே பெறுவார்கள்? போன்ற வினாக்கள் பிரதமரின் அறிவார்ந்த சிந்தனையில் ஏன் எழவில்லை.


‘கடுமையான கட்டுப்பாடு அவசியம் என்பதை மக்கள் உணரவில்லை என்று அங்கலாயத்துக் கொள்ளும் பிரதமர் அவர்களே, கொரானா நோய் தொற்று தடுப்புக்கு மக்கள் பட்டினி கிடந்து சாவது பரிகாரம் ஆகாது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பட்டினி கிடக்கும் மக்களிடம் ஆன்மீக போதனைகள் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். அவர்களுக்கு ஒரு ரொட்டித் துண்டு கொடுங்கள் போதும் என்றுதான் மகான்கள் கூறியுள்ளனர். ஆரோக்கிய வாழ்வின் பேரிடரான கொரானா வைரஸ் நோய் தொற்று மக்களிடம் உருவாக்கியுள்ள அச்சம், பயம் போன்ற உணர்வுகளைப் பயன்படுத்தி ‘கைதட்டுங்கள்’, ‘விளக்கு ஏற்றுங்கள்’ என்று மக்களின் உணர்ச்சிகளை உசுப்பித் தூண்டி திசைதிருப்பும் மலிவான செயலில் ஈடுபடுவதை நாட்டின் பிரதமர் உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசுகளுக்கு கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வரும் பிரதமர் மாநில முதலமைச்சர்கள் கோரியுள்ள பேரிடர் கால நிவாரண நிதி வழங்க அக்கறை காட்டவில்லை என்பதை மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என முத்தரன் தெரிவித்துள்ளார்.