பாஜகவும் அதிமுகவும் இணைந்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றிவருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார்.
வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. நாளையோடு தேர்தல் பிரசாரம் முடிய உள்ள நிலையில், தலைவர்கள் வேலூரை முற்றுகையிட்டு உள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா பங்கேற்றார்.


இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ நரேந்திர மோடியின் எடுபிடியாகச் செயல்பட்டுவரும் அதிமுக அரசால், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. வேலூரில் எல்லா மதத்தினரும் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் இணைந்து வாழ்கின்றனர். ஆனால், இந்தச் சூழல் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக் குறியாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருவியாக செயல்படும் பாஜக, மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிரிக்க முயற்சித்துவருகிறது. மோடி ஆட்சியில் அரசியலமைப்புச்சட்டம் கொஞ்சமும் மதிக்கபடுவதில்லை.


 நாட்டில் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீது இந்துத்துவா கும்பல்கள் கொலைவெறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதைத் தடுக்கவேண்டிய மோடி அரசு, கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் காலூன்ற குறுக்குவழிகளில் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. அதற்கு அதிமுக உடந்தையாக இருக்கிறது. பாஜகவும் அதிமுகவும் இணைந்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றிவருகின்றன.
இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேலூரில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவுக்கு ஏற்படும் தோல்வி, மோடிக்கு  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என டி.ராஜா பேசினார்.