ரஜினி ஒரு காலத்திலும் கட்சி தொடங்கமாட்டார். ரசிகர்களை கைவிட்ட ரஜினியை தமிழருவி மணியன் தூக்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். “தமிழக பணியாளர் தேர்வாணையம் சீர்குலைந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாருமே சுண்டெலிகள்தான். இந்த முறைகேடு அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயர்பொறுப்பு அதிகாரிகள் தொடர்பு இல்லாமல்  நிச்சயம் நடந்திருக்காது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரின் புதிய கூட்டணி உருவாகி தமிழகத்தில் ஊழல் நடந்தேறியுள்ளது.


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவருடைய சொந்தக் கருத்து என்று சொல்கிறார் முதல்வர். அமைச்சர் என்பது கூட்டுபொறுப்பு. இதையெல்லாம் அவருடைய சொந்தக் கருத்து என சொல்லக் கூடாது. மத ரீதியாக கருத்து தெரிவித்த அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமல் அவருடைய கருத்துக்கு ஒத்துபோவது தவறு.  நடிகர் ரஜினி -வருமான வரி விவகாரத்தில் தான் வட்டிக்கு விடுவதாக ரஜினி சொன்னார். இந்த பிரச்னை கிளரக் கூடாது என்பதற்காகத்தான் சிஏஏ-வுக்கு ஆதரவாக ரஜினி பேசினார். அதனால்தான் அவர் மீதான பிரச்னை முடித்து வைக்கப்பட்டது. விஜய் வீட்டில் என்ன நோக்கத்துக்கு சோதனை நடந்தது? பாஜகவின் அமைப்புகளில் ஒன்றாக வருமான வரித்துறை மாறிவிட்டதையே இது காட்டுகிறது. வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் பணிய வைக்கவே பயன்படுத்தபடுகிறது.

 
இது நாள் வரை எப்போது தான் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினி சொல்லவில்லை. அவருடைய படம் வரும்போதெல்லாம் படத்துக்கு கூட்டம் சேர்க்க அரசியலுக்கு வருவேன் என சொல்வது அவருக்கு வாடிக்கை. ரஜினி ஒரு காலத்திலும் கட்சி தொடங்கமாட்டார். ரசிகர்களை கைவிட்ட ரஜினியை தமிழருவி மணியன் தூக்கி பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம்.” என்று முத்தரசன் தெரிவித்தார்.