மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து 21 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்;- இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. அரசு அறிவித்துள்ள விதிகளை முறையாக மக்கள் கடைபிடித்தால் கொரோனாவை ஒழித்துவிடலாம். முகக் கவசம் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது. கொரோனா தொடர்பான  ஒவ்வொரு உயிரிழப்பும் வருத்தம் அளிக்கிறது. நாட்டில் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 50 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. குறைவான இறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அனைவரின் உயிரையும் காப்பாற்றவே அரசு முயல்கிறது. ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். 

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்றுசேர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சில துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்பி வருகிறது. மத்திய அரசின் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்புகள் பெருகும். 

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயம், சிறு குறு தொழில்கள், மீன்வளத்துறை ஆகியவற்றுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் அனைவரும் அணைந்து போராட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தற்போது அதிகரித்துள்ளது. சிறு குறு தொழில், தோட்டக்கலைத் துறை பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.