மக்கள் சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பை, இந்தியாவுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது என ராகுல்காந்தி கூறியுள்ளார். 

உலகை நாடுகளை அலறவிட்டு வரும் கொரோனா வைரசால் சர்வதேச அளவில் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75,000-ஆக உயர்ந்துள்ளது. 2,78,698 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4,421க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 114 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில்;- இந்திய மக்கள் சாதி, மதம், வகுப்பு ஆகிய வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக நம் நாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அமைந்துள்ளது. கொரோனா வைரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே பொது நோக்கத்துக்காக அவர்கள் ஒன்று திரள்வார்கள்.  இரக்கம், பச்சாதாபம் மற்றும் சுய தியாகம் ஆகியவையே இதன் மையமாகும். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.