முதல் நாள் மதுக்கடைகளை திறக்க தடையில்லை;அதற்கு அடுத்த நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட கையோடு. ஆன்லைனில் மட்டும் மதுவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய அரசிற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

கொரோனா பரவலுக்கு இடையே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கேரளாவில் மட்டும்..ஆலையங்கள் மூடியிருக்கும் போது மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அம்மாநில முதல்வர் பிரனாயிவிஜயன் அதிரடியாக அறிவித்து அம்மாநில மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் "டாஸ்மாக்" மதுபான கடைகள் 7-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்றம், மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குடிமகன்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில், 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன.  ஒருநாளில் மட்டும் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக  அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிகிறது.