court restrict to publish news on doctor balajis explanations regarding jayalalitha thumb impression issue
ஜெயலலிதா கைரேகை குறித்த திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் டாக்டர் பாலாஜி பதிலை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பாலாஜியிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அவரது பதில்கள் குறித்த செய்திகளை வெளியிடவும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த
வழக்கு விசாரணையின் போது செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பதும், செய்தி சேகரித்தும் டாக்டர் பாலாஜி கூறிய பதில்களை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி வேல்முருகன் தடை விதித்தார்.
மேலும், இந்த வழக்கில் டாக்டர் பாலாஜி வரும் நவ.3 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.
மதுரை - திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக., வேட்பாளர் சரவணன், அதிமுக., வேட்பாளர் போஸ் வேட்புமனுவில் இடம்பெற்ற ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சந்தேகம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஜெயலலிதா கைரேகைக்கு சான்று அளித்த டாக்டர் பாலாஜி, விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை குறித்து அரசு மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் திமுக வேட்பாளர் சரவணன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தம்மை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக., வேட்பாளர் ஏ.கே.போஸுக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவத்தில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை உண்மைதானா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதா கைரேகையின் உண்மைத் தன்மை குறித்து அரசு மருத்துவர் பாலாஜி இன்று, (அக்.27) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால், அதிமுக., வேட்பாளருக்கான சின்னம் ஒதுக்கக்கோரும் படிவத்தில், கையெழுத்து பெறப்படாத நிலையில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பொதுச் செயலாளர் என்ற வகையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டதாக அதிமுக தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்தான் ஜெயலலிதாவின் கைரேகைக்கு ஒப்புதல் அளித்தார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே, இந்த கைரேகையின் உண்மைத்தன்மை குறித்து திமுக., வேட்பாளர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.
