செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதில் தொடரும் சிக்கல்..! அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற நீதிபதி
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து புழல் சிறையில் ஜூலை மாதம் அடைக்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமின் மனுவை விசாரிப்பதில் ஏற்பட்ட குழப்பம்
இந்த மனுவை விசாரிக்க மறுத்து நீதிபதி அல்லி, ஜாமின் மனுவை எம்எல்ஏ, எம்பிக்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படி அறிவுறுத்தினார். இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது ஜாமின் மனுவை விசாரிக்க தங்கள் நீதிமன்றத்தில் அதிகாரம் இல்லையென சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. எனவே ஜாமின் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவை பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை விசாரிப்பது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு
இதனையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான விசாரணை இன்று காலை நீதிபதி அல்லி முன்பு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருதி ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை நீதிபதியிடம் முறையிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். இதன் காரணமாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து உடனடியாக வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்