court opinion about transport staffs strike

போக்குவரத்து ஊழியர்களின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களும் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி பேச்சுவார்த்தை நடந்தது. 

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. 2.57 சதவீத ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறையும், 2.44 சதவீத உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறையும் 2.37 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் இதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து மூன்று ஆண்டுக்கு ஒருமுறை என்றால், 2.44% ஊதிய உயர்வு வழங்க அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் 2.57% என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இன்று காலையும் வேலைநிறுத்தம் தொடர்கிறது. சென்னையில் 40% பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியாமலும் பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

பொங்கல் நெருங்கிவருவதால் அதற்குள் நிலைமை சீரடைந்துவிடுமா என்ற ஏக்கம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. இந்த பிரச்னையை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து பொங்கலுக்குள் பிரச்னைக்கு தீர்வுகாண உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் விவகாரம் தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. போக்குவரத்து ஊழியர்களின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என தெரிவித்து தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.

அதேபோல, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும் போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.