Court has dismissed the petition filed by vetrivel and Thamizhal Chelvan.
வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டிடிவி ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாக கூறி, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து இருவரும் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.
தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இருவரும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் முறைகேடு நடந்திருப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச் செல்வன் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
