could ops eps factions get two leaves symbol in election commission

உத்தரப் பிரதேசத்தில் திடீரெனச் சிக்கல். தந்தைக்கும் மகனுக்குமான தகராறு. சொந்தக்காரர்கள் குறுக்கே வர, சமாஜ்வாதி கட்சிக்குள் ஏற்பட்டது பிளவு. தந்தையார் முலாயம் சிங் கட்சியில் இருந்த சிலரை நீக்க, மகன் அகிலேஷ் யாதவ் தரப்பில் அவர்களைச் சேர்க்க... இப்படியாக இழுத்துக் கொண்டே போய், அது கட்சிச் சின்னத்துக்கு அடிபோட்டு, அதை முடக்குவது வரை தொடர்ந்தது. பின்னர் மெஜாரிட்டி உறுப்பினர்கள் என்ற காரணத்தைக் காட்டி, தேர்தல் ஆணையம் அகிலேஷ் யாதவ் தரப்புக்கே சைக்கிள் சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதாவது, ‘மெஜாரிட்டி’ என்ற அளவுகோல் இதற்கு நிர்ணயிக்கப்பட்டது போல், தங்களுக்கும் அதே இடமளிக்கும் என்று நம்புகின்றனர் எடப்பாடி, ஓபிஎஸ் ‘இணைந்த கைகள்’ தரப்பு! 

அதாவது, ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டால் எம்எல்ஏ., எம்பி., கட்சி நிர்வாகிகள் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் எவர் பக்கம் இருக்கிறார்களோ அவர் தரப்பே அந்தக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வந்திருக்கிறது. இந்த வகையில்தான், இரட்டை இலைச் சின்னமும், அதிமுக., என்ற கட்சிப் பெயரும் தங்களுக்கே கிடைக்கும் என்று எடப்பாடி- ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது. 

இருப்பினும், எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு செப்.12ல் சென்னை வானகரத்தில் கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றே ஆக வேண்டிய கட்டத்தில் இருக்கிறது அந்தத் தரப்பு. பொதுக்குழு கூட தடை இல்லை என்று சொன்ன நீதிமன்றம், பொதுக்குழுவின் தீர்மானங்கள், தாங்கள் அளிக்கப் போகும் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவைதான் என்று சொன்னதால், இப்போது தேர்தல் ஆணையமும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியே உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. 

இந்த விவகாரத்தில், எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நிறைவேற்றிய பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு, உயர் நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காது என்று டிடிவி தினகரன் தரப்பு பலமாக நம்புகிறது. 

தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரு தரப்பும் தங்கள் பக்க நியாயங்களுடனான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. அதில், ‘சசிகலா தாற்காலிகப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதும், அதன் மூலம் தினகரன் துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதும் ரத்து செய்யப்படுவதான செப்.12 பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்து, சசிகலா நியமனத்தை ரத்து செய்து, சசிகலா தற்காலிகப் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து, அதன் மூலம் தினகரன் நியமனம் ரத்து ஆகியவற்றுக்கான தீர்மானங்களையும் அளித்தனர். அதனால், சசிகலா நியமனத்தை ரத்து செய்து இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையைத் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பு. மேலும், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளும் பிரிந்திருந்த போது தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டிருந்த பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதாக இப்போது கடிதம் அளித்ததுடன், பெரும்பான்மை எம்எல்ஏ.,க்கள், தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதற்கான ஆவணங்கள், பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள், அவர்கள் அளித்த ஒப்புதல் தொடர்பான விவரங்கள் ஆகியவையும் இப்போது தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் பேரில், அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையைத் துவங்குவதாகக் கூறியுள்ளது. ஆனால், விசாரணை துவங்கும் அதே நாளிலேயே இரட்டை இலைச் சின்னத்தை யாருக்கு அளிக்கலாம் என்று ஆணையம் முடிவு செய்ய வாய்ப்பில்லை!

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கானது வரும் அக்டோபர் 24 ஆம் தேதிதான் அடுத்த விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தில் ஒரு விஷயம் நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பானதில் தேர்தல் ஆணையம் ஒரு முடிவு எடுக்க இயலாது. அப்படி எடுத்தால், அல்லது ஒரு தரப்புக்கு ஆதரவாக அது முடிவு செய்தால், மீண்டும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் கொண்டு செல்லபட்டு தடையாணை பெறப்பட்டு விடும். இதையும் தேர்தல் ஆணையம் அறிந்தேதான் வைத்திருக்கும். அவ்வாறு ஏதேனும் ஒரு முடிவு எடுக்க தேர்தல் ஆணையம் முயன்றால், நிச்சயம் அது ஒரு சிக்கலில்தான் மாட்டிக் கொள்ளும். 

இப்படி ஒரு பின்னணியில் அதிமுக.,வின் கே.சி. பழனிச்சாமி முன்னதாக 2017 ஜனவரி மாதத்தில், தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் சசிகலா தாற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் அவர், தனது மனுவுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மீண்டும் ஒரு மனு அளித்தார். அவரது மனுவின் படி, அதிமுகவின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்தெடுக்கப்படவேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை 6 மாதத்தில் நடத்த வேண்டும். பொதுச் செயலாளர் பதவி இனி கிடையாது என்ற செப்.12ம் தேதி கூடிய பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட அதிமுகவின் விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.

இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்க வேண்டும், அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகளைக் காக்க வேண்டும். சசிகலா பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பது போல், ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வும் செல்லாது. (அதிமுக., கட்சி விதிகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது) என்று கே.சி. பழனிச்சாமி அந்த மனுவில் கோரியுள்ளாராம். இதனிடையே கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப் பெறுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது. 

எனவே கட்சி அமைப்பு விதிகள், உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட விஷயங்களுக்குள் போகாமல், கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை குறித்து மட்டுமே தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இயங்குமானால், உச்ச நீதிமன்றத்தில் கதவுகளைத் தட்டவும் மறு தரப்பு முயலும். எனவே யுத்தம் அவ்வளவு எளிதில் முடிவுறாது. இரட்டை இலையும் புயலில் நிலை தடுமாறி சின்னாபின்னமாகிக் கொண்டுதான் முடங்கிக் கிடக்கும்!