திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நேற்று கவர்னரிடம் கொடுத்துள்ளார். இந்த பட்டியலில் உண்மை இருந்தால், ஊழல் குறித்து விசாரிக்க பாஜகவும் வலியுறுத்தும் என பாஜக தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே நடந்த விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்ட நிகழ்ச்சியில் தமிழக பாஜ மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மது விற்பனை மூலம் கோடி, கோடியாக லாபம் சம்பாதிக்கும் அதிகாரிகள், நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு நாள் மழைக்கே நிரம்பும் சாத்தியார் அணை, இப்போது 3 மாதங்கள் மழை பெய்தும் நிரம்பவில்லை.

இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம். இந்தத்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நேற்று கவர்னரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த பட்டியலில் உண்மை இருந்தால், ஊழல் குறித்து விசாரிக்க பாஜகவும் வலியுறுத்தும்’’என்று தெரிவித்துள்ளார்.