இத்தனைச் சிறப்புடையப் பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த் தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
பள்ளிக்கரனை சதூப்பு நிலத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சூற்றுசூழல் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன அதே நேரத்தில் சதுப்பு நிலத்தை தூர்வாரும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அளவிடமுடியாத து என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கட்டுரையின் முழு தொகுப்பு பின் வருமாறு:
65 வகையான வலசைப்பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள், 50 வகையான மீனினங்கள், 15 வகையானப் பாம்புகள், 10 வகையானப் பல்லிகள், 11 வகையான இருவாழ்விகள், 10 வகையானப் பாலூட்டிகள், 34 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 20 வகையானத் தட்டான்கள், 24 வகையான ஓட்டுடலிகள், 8 வகையானக் கரப்பான்கள், 78 வகையான மிதவை உயிரினங்கள், 167 வகையானத் தாவரங்கள் என மொத்தம் 625 -க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்கள்.
இவை அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க முடியுமென்றால் நம்பமுடிகிறதா? அதுவும் இந்தியாவின் மாசுபட்ட பெருநகரங்களிலொன்றின் அதிக மாசுபட்ட நீர்நிலையில் குறிப்பாகத் தினமும் 5,000 மெட்ரிக் டன்களுக்குமேல் மாநகராட்சிக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் இவ்வுயிர்கள் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? அந்த இடம் வேறு எதுவுமல்ல சென்னை மாநகரின் பள்ளிக்கரனை சதுப்புநிலம்தான். எந்த ஒரு உயிரியல் பூங்காவிலும்கூட இத்தனை அதிகப் பல்லுயிரின வளத்தைப் பார்க்க இயலாது. அதுமட்டுமின்றி சென்னையின் பெரும் நிலப்பரப்புக்கு வெள்ள வடிகாலாகவும் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் ஆதாரமாகவும் பள்ளிக்கரனை சதுப்புநிலம் திகழ்ந்து வருகிறது.
இந்தியா முழுதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரினவளமிக்க 94 சதுப்புநிலங்களில் தமிழகத்தின் மூன்று இடங்களில் ஒன்றாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சிறப்பு பெறுகிறது.
இத்தனைச் சிறப்புடையப் பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த் தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பல்லாயிரம் உயிரினங்களைத் தாங்கி நிற்கும் பெரும் மழைக்காடுகளை வெறும் மரத்தோட்டங்கள் போன்று பாவிக்கும் மனித மைய சிந்தனையின் (Anthropocene) நீட்சியாகவே இதைப் பார்க்க முடிகிறது. ஆழப்படுத்தி, காம்பவுண்ட் சுவர் எழுப்பி, மதகுகள் அமைத்துத் தண்ணீர் நிரப்ப பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னைக் கார்ப்பரேஷனின் தண்ணீர்த் தொட்டியல்ல. அது மனிதரால் அமைக்கப்பட்ட ஏரியோ நீர்நிலையோ அல்ல. மாறாக ஒரு செழிப்புமிக்க வாழிடம். நீர் இருப்பு நிச்சயமற்ற சூழலில் ஏரி குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் பள்ளிக்கரணையின் முக்கியத்துவம் அதன் இயற்கையான சதுப்புநிலச் சூழலியேயே இருக்கிறது. அதை மனிதர்கள் அமைத்த சாதாரண ஏரிகுளங்களோடு ஒப்பிட முடியாது.
பள்ளிக்கரணையில் பார்க்கக்கூடிய பலவிதமான உயிரினங்களைப் பள்ளிக்கரணையைவிட அதிக நீருள்ள அதிகத் தூய்மையான அதன் அருகாமை ஏரிகளிலோ நீர்நிலைகளிலோகூடக் காண முடியாது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நிலவமைப்பு, மண்ணின் தன்மை, ஆழம், பருவகாலங்களுக்கேற்ற தண்ணீர் இருப்பு, உணவு போன்றவையே அதற்கு ஏற்ற தகவமைப்புகொண்ட ஏராளமான உயிரினங்களை அப்பகுதியை நோக்கி ஈர்த்திருக்கிறது. இயல் உயிரினங்கள் மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட வலசை செல்லும் பறவையினங்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்து ஒவ்வொருவருடமும் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது. இவற்றில் அழிவின் விழிம்பில் இருக்கும் உயிரினங்களும் அடங்கும். இந்த சதுப்புநிலத்தின் இயற்கைத் தன்மையை சிதைப்பது அதை நம்பியிருக்கும் எண்ணெற்ற உயிரினங்களின் அழிவுக்கே இட்டுச் செல்லும்.
உதாரணத்துக்குச் சொல்வதானால் பள்ளிக்கரணையிலிருக்கும் அளவில் பெரிய உள்ளூர்ப் பறவையான சங்குவளை நாரை (Painted Stork) மற்றும் வலசைப் பறவையான பூநாரைகள் (Flamingo) போன்றவை நீந்த இயலாதவை; ஆழம் குறைவான நீரில் மட்டுமே வாழும் தகவமைப்பு பெற்றவை. சதுப்புநிலத்தை ஆழப்படுத்துவது இவ்வுயிரினங்களின் அழிவுக்கே வழிவகுக்கும். இதுபோன்ற எண்ணெற்ற இந்த வாழிடத்துக்கேயானத் தகவமைப்பு பெற்ற உயிரினங்களின் இருப்பை தூர்வாரி ஆழப்படுத்துதல் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கும். ஒரு காலத்தில் 6000 ஹெக்டேருக்குமேல் பரந்து விரிந்து பல்லுயிரின வளத்தின் உச்சமாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் அரசின் அலட்சியத்தாலும் தனியாரின் ஆக்கிரமிப்பாலும் இன்று வெறும் 600 ஹெக்டேர்களாகச் சுருங்கிப்போயிருக்கிறது. இங்கு அரசே ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூடப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதியான பெரும்பாக்கத்தில் (சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் இடையே) சாலை விரிவாக்கத்துக்காக சதுப்புநிலத்தின் பெரும்பகுதி மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
இன்னொருபுறம் தனியாரின் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்காக தொடர்ந்து சதுப்புநிலம் சாலைகளாலும் கட்டிடங்களாலும் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆக்கிரமிப்பு இன்னொருபுறம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள், ஒலி, ஒளி மாசு, வரத்துக்கால்வாய்களின் சாக்கடை நீர் என இத்தனையும் தாண்டி உயிர்த்திருக்கும் இந்தப் பல்லுயிர் வளத்தைக் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெரிய அளவில் சுற்றுச்சூழல் பார்வையில்லாத காலகட்டங்களில் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு நீர்நிலைகளும் காடுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று உலகம் முழுதும் சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கரணையை ஆழப்படுத்தும் சூழல்விரோத முடிவு அயற்சியடையச் செய்கிறது. நம்மை மட்டுமல்ல இச்செயல் பள்ளிக்கரணையைப் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக 2005 - ஆம் ஆண்டு அறிவித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னெடுப்பையும் சர்வநாசமாக்கவிருக்கிறது.
அனைத்தையும் ஒருவரியில் சொல்வதானால் பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக்க முயல்வது அதன் பல்லுயிரின வளத்துக்கு சமாதிகட்டுவதற்கு ஒப்பானது. இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட்டு அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரசை வலியுறுத்துகிறது. பள்ளிக்கரணையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் Care Earth போன்ற அமைப்புகள் ஆய்வுகளையும் பங்களிப்பையும் செய்துவருகின்றன. அவற்றோடு தமிழகமெங்கும் தனித்தும் குழுவாகவும் இயங்கும் சூழல் நலன் விரும்பும் ஒவ்வொரு உள்ளங்களையும் மற்றும் அரசியல் கட்சிகளையும் இவ்விஷயத்தில் கவனம்கொள்ள பூவுலகின் நண்பர்கள் கோருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 1, 2020, 3:45 PM IST