சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கனி மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அங்காடி மேலாண்மை குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சில கட்டுப்பாடுகளுடன் காய், கனி அங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.  தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கவும், மீன் அங்காடி இறைச்சி மற்றும் முட்டை கடைகள் சுகாதார முறையிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்க சில தளர்வுகளுடன் 6-7-2020 முதல் (கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) (19-7-2020 மற்றும் 26 -7 2020 முழு ஊரடங்கு நாட்கள் தவிர) ஊரடங்கை நீட்டித்து ஆணையிடப்பட்டது. 

காய்கறி கடைகள், மளிகை கடைகள், மீன் அங்காடி, இறைச்சி மற்றும் இதர கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும், அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் மற்றும் கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது கைகளை கழுவுவதும் அவசியமாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டத்தை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், மேற்பார்வை இடவும், மாநகராட்சி கோட்ட உதவி பொறியாளர் (அல்லது) இளநிலை பொறியாளர் ஒருங்கிணைப்பாளராக கொண்டு காவல் துறை பணியாளர், மீன்வள உதவி ஆய்வாளர் (மீன் அங்காடியை பொருத்தவரையில் மட்டும்) சம்பந்தப்பட்ட அங்காடிகளில் இருந்து மூன்று பிரதிநிதிகளை உள்ளடக்கிய 81 அங்காடி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் சிறப்பு வட்டாட்சியர் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கனி, மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட அங்காடி மேலாண்மை குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் ஆணையர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் (14-7-2020) இன்று நடைபெற்றது. 

அதில் ஆணையர் பிரகாஷ் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:- இந்த அங்காடி மேலாண்மை குழுவினர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அங்காடிகளின் செயல்பாடுகளை தினமும் கண்காணித்து சமூக இடைவெளியினை கடைபிடிப்பதையும், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருப்பதையும், அங்காடியின் நுழைவாயிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கை கழுவுவதற்காக கிருமிநாசினி வைத்திருப்பதையும், அங்காடிகளில் உள்ள கழிவுகள் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசம் கையுறை ஆகியவற்றை முறையாக அப்புறம் படுத்துவதையும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு அறிவிப்பு பலகை, சுவரொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா சம்பந்தப்பட்ட  காவல்துறை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு பதிவுகள் கண்காணிக்க படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். முகக் கவசம் அணியாத நபர்களை அங்காடிக்குள் அனுமதிக்கக்கூடாது.  அங்காடிகளில் வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மற்றும் கட்டுப்படுத்த தேவையான எண்ணிக்கையிலான பாதுகாவலர்கள், கை கழுவுவதற்கான கிருமிநாசினி,(சானிடைசர்) அல்லது சோப்பு கரைசல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அங்காடி மேலாண்மை குழுவே ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அங்காடி மற்றும் கடைகளை மேற்பார்வையிடும் கண்காணிப்பு குழுவானது,  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் விதி முறைகளை கடைப்பிடிப்பதை கண்காணித்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அது குறித்து அறிக்கை சமர்ப்பித்து மேல் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என ஆணையாளர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.