கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுவரை 571 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக திமுக அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கையும், கமல் தனது அலுவலகத்தையும், இடதுசாரிக் கட்சிகள் தம் அலுவலகங்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்த நிலையில், விஜயகாந்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா சிகிச்சைக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் மேல்மருவத்தூர் அருகில் இயங்கும் ஆண்டாள் அழகர் பொறியியல்  கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  கூறியுள்ளார்.