கொரோனா வைரஸை எதிர்த்து மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தை குவித்து வைத்துக்கொண்டு மாநில அரசுகளை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்து வருகின்றது என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில்;- கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரில் 3 மாத ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. சீன அரசின் அதிவேக நடவடிக்கைகள் அந்நகரத்தை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பச் செய்துள்ளது. பெருமளவு மீண்டு வந்தபோதும், அலட்சியமாக இல்லாமல் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீனாவிடம் இருந்து, கொரோனா குறித்த படிப்பினையை இந்தியா கற்க வேண்டும். கொரோனா வைரஸை எதிர்த்து மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தை குவித்து வைத்துக்கொண்டு மாநில அரசுகளை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்து வருகின்றது.

சுகாதாரத்துறை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் அதற்குரிய அதிகாரங்களைப் பறித்துக்கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எனினும் கோவிட் -19க்கு எதிரான மத்திய அரசின் கொள்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற அவசரகதியில் செயல்பட்டு வந்துள்ளது. 150 நாடுகளில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 142 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டபின்தான் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு இந்தியா தடை விதித்தது. அதற்குள் ஜனவரி 18 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்துவிட்டனர். இவர்கள் மூலமாக இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதற்கு மத்திய பாஜக அரசின் அலட்சியப்போக்குதான் காரணமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 3 கோடியே 80 லட்சம் முகக்கவசங்களும், 60 லட்சம் பாதுகாப்பு உடைகளும் தேவைப்படுகின்றன. பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிகிச்சையையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் 10 லட்சம் தேவைப்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் வெறும் 49 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரைப் பரிசோதிக்கும் கருவிகள் நம்மிடம் போதிய அளவு இல்லை என்பதை மத்திய அரசின் கோவிட்-19 மருத்துவனைகளின் மருத்துவக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் கிரிதர் கியானி ஒப்புக் கொள்கிறார்.

123 அரசு மருத்துவமனைகளில் வெறும் 36 சதவீத பரிசோதனை ஆய்வகங்களே உள்ளன. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 10 ஆய்வகங்களே உள்ளன. 10 லட்சம் பேரில் 21 பேருக்கு சோதனை செய்கிற வசதிதான் இந்தியாவில் உள்ளது. ஆனால், தென்கொரியாவில் 1,931, இத்தாலி 6,268, பிரிட்டன் 1,469, அமெரிக்கா 1,480, இந்தியா 21 என்கிற அதலபாதாள நிலையில் இருக்கிறது. அதே போல 10 ஆயிரம் மக்களுக்கு 8 மருத்துவர்கள்தான் இந்தியாவில் உள்ளனர். ஆனால், இத்தாலியில் 41, கொரியாவில் 71 என்கிற அளவில் இருக்கிறது. மேலும் 55 ஆயிரம் மக்களுக்கு ஒரு அரசு மருத்துவமனைதான் இருக்கிறது. இத்தகைய குறைவான கட்டமைப்பு இருப்பதால் தான் தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20 நாட்களாக அவர்களுக்கு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை பரிசோதிக்க முடியாத அவல நிலையில் தமிழக அரசு இருக்கிறது. சீனாவில் இருந்து துரித சோதனை கருவி வரும், வரும் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை வந்த பாடு இல்லை. இந்நிலையில், அச்சம், பீதியோடு மன உளைச்சலில் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள். இந்தியாவில் 471 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகும், பரிசோதனைக் கருவிகளை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் சமூகத் தொற்று பரவல் தொடங்கிவிட்டதாக ஐசிஎம்ஆர் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இன்றைய தேதி வரை, கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறிக் கொண்டிருக்கிறது. இந்த விசயத்தில் வெளிப்படைத்தன்மை தேவை.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மைக்கேல் ஜே ரியான் உலக நாடுகளுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், "கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் முந்த வேண்டும். இல்லையேல், நீங்கள் நகரமுடியாதபடி கட்டிப் போட்டுவிட்டு வைரஸ் முந்திவிடும்" என்று எச்சரித்திருந்தார். இதனை இந்தியா கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்தியப் பிரதமரோ கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு தமது பேச்சு வன்மையால் திசை திருப்பி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. 21 நாள் மக்கள் ஊரடங்குக்கு பிறகு இனியாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து கொரோனா நோயை வீழ்த்துகிற முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.