ஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தால் ஃபிரிட்ஜ், பீரோ, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனை சாவடிகள் அமைத்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். மீறி வருபவர்களுக்கு கடுமையாக தண்டனையும் கொடுத்து வருகின்றனர். 

ஆனால், சமூக விலகலை பின்பற்றாமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவதற்காக கடைகளில் மக்கள் குவிந்தனா். இதனையடுத்து, விதிகளை கடைப்பிடிக்காமல் இருந்த இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை கடைப்பிடித்து வீட்டில் இருப்பவர்களுக்கு அதிரடி பரிசு அறிவிப்பை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார். இதன்படி முதல் பரிசு - பிரிட்ஜ், 2-ம் பரிசு - கட்டில், 3-ம் பரிசு - குக்கர், 4-ம் பரிசு - பட்டுச்சேலை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.