கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு, தமிழக அரசு ரூ.1,000 ரொக்கம் மற்றும் ஒரு மாத ரேசன் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கத்தின் கீழ் செயல்படும் இரு ரேசன் கடைகளில் நீண்ட வரிசைகளில் சமூக இடைவெளி விட்டு காத்திருந்த பொது மக்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்க தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் 9.77 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட கோவையை சேர்ந்த 10 பேரை தேடும் பணியில் சிறப்புக்குழுக்களை அமைத்து தேடி வருகின்றனர். தாமாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் முன் வர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பொதுமக்களும் தங்களது பங்கினை போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.