புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாகவே சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினரை தொடர்ந்து எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் முத்தமிழ் செல்வனுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.