ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். அதேபோல், கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன், எம்.பி.வசந்தகுமார், முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் காந்தி (55). திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர். புதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஒரத்தநாடு முன்னாள் ஒன்றிய குழுதலைவர், துணை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை காந்தி உயிரிழந்தார்.. இவருக்கு மனைவி கலாவதி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.