இந்தியாவில் தடுப்பூசி தயாரானவுடன் முன்னணி களப்பணியாளர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி  கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, உலக அளவில் 2.31கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  8.3 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் 1.57 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  66 லட்சம் பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில்   61, 838 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகளவில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் அது கட்டுக்குள் வரவில்லை. எனவே பிரத்தியேக தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்புசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. 

இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான அறிவிப்புகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளது. அதில் ரஷ்யா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது, சீனாவும் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவும்  தடுப்பூசி குறித்து அறிவிப்பு வெளியிட தயாராகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் டெல்லி மும்பை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா சற்று குறைந்திருப்பதாகவும், ஆனாலும் நகரங்களில் பரிசோதனை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இரண்டாவது அலை ஏற்பட்டிருக்கிறது என கூறியுள்ள அவர், இந்தியாவில் கொரோனா வைரசின் இயல்பை புரிந்து கொள்வதில் இடைவெளி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் கொரோனா பரிசோதனைகளை அதிரடியாக இந்தியா மேம்படுத்தி உள்ளதாகவும், தினமும் 10 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கும் நிலை எதிர்வரும் வாரங்களில் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் உருவாக்கப்படுகிற 3 தடுப்பூசிகளின் பரிசோதனை மேம்பட்ட நிலையில் இருப்பதாக கூறியுள்ள அவர், இந்தியாவில் துவக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் பரிசோதனைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவைப் பொருத்தவரையில் தடுப்பூசி முன்கல பணியாளர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நோய்களுடன் போராடுபவர்களுக்கும்  முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளார். அதன்பின்னர் கிடைக்கக்கூடிய அளவைப் பொருத்து அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான சிறப்பு திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.