கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்  இரண்டாவது தடுப்பூசி போடும் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய சுகாதாரத் துறை அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட 9  மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசிகளை அனுப்பிவைத்தார். பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர். வரும் 16ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தற்போது தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளது. திருச்சி மண்டலத்திற்கு 68, 800 தடுப்பூசிகள், அதாவது புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வந்துள்ளது. 

நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்ட உடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணிவிடக்கூடாது. முதல் டோஸ் போட்ட பின்பு  28 நாட்கள் கழித்து 2வது டோஸ் போடப்படும். அதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட 42 நாட்களுக்கு பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த  வேண்டிய அவசியமில்லை என்றார். அதேபோல் சமூக வலைதளங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.