சென்னையில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மக்கள் நல பணியில் ஈடுபடும் அமைச்சர்கள், போலீசார், மருத்துவர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன, எனினும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை, கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 571 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரத்து 723 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையை பொருத்த வரையில்  சுகாதாரத்துறை மற்றும்  மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கையின் காரணமாக வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள்  வந்துள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்றிலிருந்து குணமடைவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு தொற்று இருப்பது சோதனைமூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையுப் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருப்பதால், அங்கு கொரோனா தொற்று நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில்  நோய் தடுப்பு பணியில் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சீதாலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட ஆட்சியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியரும் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளார். இது அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.