முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ம் தேதி சட்டபேரவை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டபேரவையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், காவலர்கள், பாதுகாவலர்கள், பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற உத்தரவை சபாநாயகர் தனபால் பிறப்பித்திருந்தார். இந்த சூழலில்  நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எதிர்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவர்களது இல்லத்திற்கே சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.