தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரேநாளில் 1515 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 31667ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. 

மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. 

திமுக தலைவர் ஸ்டாலின், ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் திமுக நிர்வாகிகளின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய அறிவுறுத்தியதுடன், நிர்வாகிகள் செய்துவரும் உதவிகளையும் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்துவருகிறார். 

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் மக்களுக்கு செய்த உதவிகளை கேட்டறிவதுடன், அவர்களை தனிமனித இடைவெளியை பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவந்தார்.

ஸ்டாலினும் நேரடியாக தனது கொளத்தூர் தொகுதி உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தார். முகக்கவசம், கையுறை அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றித்தான் அவர் நிவாரண உதவிகளை செய்தார். இதற்கிடையே, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த கவலையில் இருக்கிறார்.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு கடந்த 5ம் தேதி(வெள்ளிக்கிழமை) தொடர்ந்து இருமல் வந்துள்ளது. காய்ச்சல் வருவதுபோலவும் இருந்துள்ளது. அதனால் ஸ்டாலின் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். ஸ்டாலினுக்கும் கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உடனடியாக அன்றைய தினமே(5ம் தேதி) காது, மூக்கு, தொண்டை(ENT) ஸ்பெஷலிஸ்ட்டான மருத்துவர் காமேஷ்வரனை அணுகியுள்ளார். மருத்துவர் காமேஷ்வரனின் ஆலோசனைப்படி, ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவு வரும்வரை, ஸ்டாலின் குடுபத்தினர் மிகுந்த பதற்றத்தில் இருந்துள்ளனர். ஆனால் பரிசோதனை முடிவில் ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. அதனால், ஸ்டாலின் குடும்பத்தினரும், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.