கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில்  தலைமைச் செயலகத்திற்கு இன்று வந்த  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது .  இன்று தலைமைச் செயலகம் வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர்  துரைமுருகன் ஆகியோருக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .  உலக அளவில்  சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதில்  பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது .  இது  உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . 

இந்நிலையில் கொரோனா  வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு ,  மாநில அரசுகளுக்கு  உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இந்நிலையில் கொரோனாவால்  பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மூன்றாக உள்ள நிலையில் ,  அவர்கள் வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .   இந்நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது .  இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர்  அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர் .  முதலில் தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது . அதேபோல் தலைமைச் செயலகத்துக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு கொரோனா காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அத்துடன் அவர்கள் கைகளும் சனிடைசர் மூலம் சுத்தம் செய்த பிறகே அவர்கள் தலைமைச் செயலகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இந்நிலையில் இன்று காலை தலைமைச் செயலக பத்தாம் என் நுழைவு வாயில் வழியாக வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு சுகாதாரத் துறையின் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .  இதில் முதல்வரும் துணை முதல்வரும் ஆர்வத்துடன் பரிசோதனை செய்து கொண்டனர் .  அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை கருவியில்  முதலமைச்சரின் உடல் வெப்பநிலை 93.5 பாரன்ஹீட் எனவும் ,  துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு 98.6 பாரன்ஹீட் எனவும் பதிவானது .  இதைத்தொடர்ந்து சனிடைசர் மூலம் அவர்கள் இருவரும் கைகளை சுத்தம் செய்து கொண்டனர் .  அவர்களை  தொடர்ந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் திமுக மூத்த உறுப்பினர்கள் கே என் நேரு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொரொனா வைரஸ் கிருமி ஸ்கேனிங் செய்து கொண்டனர் . இந்த பரிசோதனைக்குப் பின்னரே  சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.