ஏற்கெனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க இருந்த இரு எம்.எல்.ஏ.க்கள், 5 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 
தமிழகம் சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டம் தமிழக ஆளுநர் உரையுடன் நாளை கூட உள்ளது. இக்கூட்டத் தொடரை செயின் ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஆளுங்கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளதால், கலைவாணர் அரங்கிலேயே சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரை வழக்கம்போல் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் நடத்தப்படுகிறது. இதற்கு விரிவான ஏற்பாடுகளை பேரவை செயலகம் செய்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஏற்கெனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பரிசோதனையில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல கூட்டத் தொடரில் செய்தி சேகரிக்க பங்கேற்க இருந்த 5 பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இரு எம்.எல்.ஏ.க்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு பணிகளை பேரவை செயலகம் தீவிரப்படுத்தியுள்ளது.
