Vellakoil Saminathan corona positive : அமைச்சர் சாமிநாதனுக்கு தொற்று!! கோவை மருத்துவமனையில் அனுமதி
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும், காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 640 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 7 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 692 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 93 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக நேற்று சென்னையில் 126 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல், கோவையில் 106, ஈரோடு 49, திருப்பூர் 45 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், அண்மையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
தற்போது நடிகர் அர்ஜுன், நடிகர் விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.