கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்து வருகிறது. இதுவரையில் 17,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12,992 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 322 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனரா? போன்ற முக்கிய தகவல்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மண்டலம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுவினர் தினமும் மாலை 5:00 மணிக்குள் கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்துள்ளார்