முடிந்தவர்கள் வீட்டில் பாதுகாப்பாய் இருங்கள். மற்றவர்கள் எல்லோரும் வருவது வரட்டும் என்ற மனநிலையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான் என கொரோனா குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது முகநூல் பக்கத்தில், ‘’தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கை தளர்த்துகிறார்கள்.. நேற்று சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி. இன்று ஆட்டோக்களுக்கு. சில கட்டுப்பாடுகளோடு செயல்பட அனுமதித்து இருக்கிறார்கள். உண்மையில், இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் சும்மா, நம்ம மன ஆறுதலுக்குத்தான். பலத்த பாதுகாப்போடு காய் வாங்கினாலே தொற்றிய வைரஸ், இப்போ என்ன சும்மாவா இருக்கும்.

பொது வாகனத்தில் நாலு ஆளுக்கு பதில் ஒற்றை ஆள் போவதால் எல்லாம் ரிஸ்க் குறையாது. ஒவ்வொரு முறையும் ஆட்டோவை சுத்தப்படுத்தவேண்டும். இதெல்லாம் கொஞ்ச நாளிலேயே யாரும் யாரும் கடைபிடிக்கவும் போவதில்லை, அதை யாரும் தடுக்கவும் முடியாது. ஆட்டோவில் ஒரு பயணி மட்டுமே ஏற்றவேண்டும் என்றால், அப்போ ஷேர் ஆட்டோ இயலாது. ஒற்றை பயணி விதியை ஆட்டோ ஓட்டுனர்கள் கடைபிடித்தாலும் பயணிகள் விடுவார்களா? குடும்பமாக பயணிப்பவர்கள் பெண்கள் சிறார்கள் தனி தனி ஆட்டோவா எடுப்பார்கள்? போலீஸ் ஒவ்வொரு ஆட்டோவிலும் குடும்பமா இல்லை ஷேரிங்கா என்று பார்க்கவே முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பிடிப்பார்கள், சம்திங் வாங்கிக்கொண்டு விட்டுவிடுவார்கள், இதுதான் நடக்க போகிறது. பள்ளிகளை திறந்தால் மீன் கூடை மாதிரி குழந்தைகளை அடைத்து கொண்டு செல்லும் வண்டிகளும் வலம் வர துவங்கும்.

ஷூட்டிங்: இதுவும் இப்படித்தான். ஒரு லொகேஷனில் இன்று ஒரு க்ரூப், நாளை வேறு க்ரூப் என்று ஆட்கள் மாறி மாறி வரும் பொழுது, கண்டிப்பாக தொற்று வரும். படப்பிடிப்பு லொகேஷன்களை தினசரி கிரிமிநாசனம் செய்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. முடிந்தவர்கள் வீட்டில் பாதுகாப்பாய் இருங்கள். மற்றவர்கள் எல்லோரும் வருவது வரட்டும் என்ற மனநிலையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதுதான்’’எனத் தெரிவித்துள்ளார்.