மத்திய பிரதேசத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் மார்ச் 23-ம் தேதி இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியால் அந்த மாநிலத்தில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார். மேலும், தளபதி இல்லாத படையைப்போல சுகாதார அமைச்சரின்றி கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றனர். 

இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வர் சவராஜ் சிங் சவுகான் பெருதும் நம்பியிருந்தார். ஆனால் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 85 ஊழியர்கள் என சுகாதாரத்துறையைச் சேர்ந்த 89 பேருக்கு கொரோனா தொற்றிக்கொண்டது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி காவல்துறையைச் சேர்ந்த 40 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை மத்தியப் பிரதேசத்தில் 1090 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர். ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆர்வம் காட்டிய பாஜக மக்களை காப்பாற்றுவதில் காட்டவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.  இந்நிலையில், தனி ஒரு ஆளாக கொரோனோ பரவலை எப்படி தடுக்கப் போகிறார் சவுகான் என்பது பலருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது.