மதுரையில் தினசரி குறைந்தபட்சம் 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்திட வலியுறுத்தி நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் எம்.பி.யான சு.வெங்கடேசன், திமுக எம்எல்ஏக்கள் பி.மூர்த்தி, சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உலக அளவிலும் இந்திய நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்தியா அதில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, மும்பை, டெல்லி அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சென்னை கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் பகுதியாக மாறியுள்ளது. இதனால், தற்போது தினசரி சென்னையில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், சென்னையிலிருந்து மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடந்த 10 நாட்களில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை வாகனங்கள் மூலம் வருகை தந்துள்ளார்கள். விமான நிலையத்தில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இதர வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவில்லை. மாநிலத்தில் பிற மாவட்டங்கள் பரிசோதனை செய்துள்ள புள்ளிவிபரத்தின்படி, மதுரை மாவட்டம் 30-வது இடத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் செயலற்றுக்கிடக்கிறது என்பதன் அடையாளம் இது. நிர்வாகத் திறமையின்மைக்காக மக்களின் உயிரை காவு கொடுக்க முடியாது.

எனவே, மதுரையில் தினசரி குறைந்தபட்சம் மூவாயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வழியுறுத்தி மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி. மூர்த்தி, சரவணன் ஆகியோர் நாளை  காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மதுரையின் நலம் விரும்பும் ஜனநாயக சக்திகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.