கொரோனா கொண்டாட்டம்..! தடுப்பு பணியில், பறையிசை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம்..! சென்னை மாநகராட்சி அதிரடி
அதாவது பேரணி, வீதி நாடகங்கள், கானா பாடல்கள், பறையிசை, பொம்மலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கண்காட்சி மற்றும் தன் சுத்தம் பேணிக்காக்க பொருட்கள் போன்றவற்றின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை சமூக களப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கம், கானா பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை சமூக களப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு-37 வியாசர்பாடி, முல்லை நகரில் கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கம், கானா பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆணையர் பிரகாஷ் இன்று துவக்கி வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் சென்னை சமூக களப்பணி திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அனுமதி அளித்துள்ளார். சென்னை சமூக களப்பணி திட்டம் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பல்வேறு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, 15 மண்டலங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள 1979 குடிசைவாழ் பகுதிகளில், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களை பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுதல், நாள்பட்ட வியாதி உடையவர்களுக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுக்க உதவி புரிதல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 92 தொண்டு நிறுவனங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன. இதற்காக மொத்தம் 4,523 ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக கணக்கெடுப்பு மற்றும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை களப்பணியாளர்கள் மூலம் 6,05,785 வீடுகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர் குடும்ப தொடர்பான அடிப்படை விவரங்கள் அனைத்தும் சேகரித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு களப்பணியாளராலும் 150 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இந்த களப்பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துதல், முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ள இலவச முகக்கவசங்களை அவர்களுக்கு வழங்குதல், கபசுர குடிநீர் விநியோகித்தல் மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை வாங்கிக் கொடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் இதுபோன்ற அடர்த்தியான பகுதிகளில், இதுவரை 5,82,760 வீடுகளில் 39 சதவீத வீடுகள் தோற்றால் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ள வீடுகள், அதாவது முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை களப்பணியாளர்கள் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த களப்பணியாளர்கள் இதுநாள்வரை 31,740 காய்ச்சல் இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களில் 22,035 நபர்கள் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 15,585 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தொண்டு நிறுவனங்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு செய்வது மட்டுமல்லாமல் 492 தகவல் தொடர்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடிசைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது பேரணி, வீதி நாடகங்கள், கானா பாடல்கள், பறையிசை, பொம்மலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கண்காட்சி மற்றும் தன் சுத்தம் பேணிக்காக்க பொருட்கள் போன்றவற்றின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடிசைவாழ் பகுதி மக்களிடம் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளன என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்தார்.