சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’’மக்களின் அறியாமையால் ஆட்சிக்கு வந்த ஒருவர்; அவர்கள் அறியாமலேயே ஆட்சிக்கு வந்த இன்னொருவர். இந்த சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம். இருந்தாலும் முயல்கிறோம்.

 

ஊரடங்கிலும் டாஸ்மாக்கை திறக்க, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்ல, டோக்கன் விநியோகிக்க... என்று மக்களை குடிகாரர்களாக்க செய்த முன்னேற்பாடுகளில் சிறிதளவேனும் அவர்களை நோயற்றவர்களாக காப்பதற்கு செய்திருந்தால் இந்நேரம் கொரோனாவின் தாக்கம் குறைந்திருக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.