கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பாலன்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு (68) கடந்த 23-ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை அவருக்கு இருந்ததால் நேற்றைய தினம் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பாலன் நியமன சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஏ.எஃப்.டி பஞ்சாலையின் வாரியத் தலைவராகவும் பதவி வகித்தவர். கொரோனா தொற்றுக்கு புதுச்சேரியில் உயிரிழந்த முதல் அரசியல் கட்சி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் மிக முக்கிய பொறுப்பு வகித்த அவர் உயிரிழந்துள்ளதால் கட்சித்தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 1,720 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 43 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மீதமுள்ள 1,109 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.