கொரோனா தொற்று காரணமாக பீகார் மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ்ய துறை அமைச்சர் கபில் தியோ காமத் இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ்குமாரின் மிகவும் நம்பிக்கை உரிய தலைவர் கபில்தேவ் காமத்(69). இவர் மாநில பஞ்சாயத்து ராஜ்ய அமைச்சராக இருந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய ஜனதா கட்சி இந்த முறை தேர்தலில் அவரது மருமகள் மீனா காமத்தை தனது வேட்பாளராக அறிவித்தது.

இந்நிலையில், அமைச்சர் கபில் தேவ் காமத்துக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது கபில்தேவ் காலமானார். ஏற்கெனவே அவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.