பெட்ஷீட்டை ஒளிச்சு வெச்சுட்டா ஃபர்ஸ்ட் நடக்காது!-ன்னு மொக்கையா யோசிக்கிற மாதிரி, தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்காமல் போவதால் அவர் இனி தேர்தல்களில் வெற்றி பெற முடியாது! என்று அ.தி.மு.க.வினர் அம்மாஞ்சியாக நினைத்துக் கொண்டாட, தினகரனோ ‘நாய், பேய் சின்னத்துல கூட நின்னு உங்களை விரட்டுவோம்!’ என்று தெறிக்க விட்டிருக்கிறார். 

தங்களின் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கிட கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. உச்சநீதிமன்றத்துக்கு போனது. இந்த வழக்கு பல நிலைகளை கடந்து நேற்று தீர்ப்புக்கு வந்து நின்றது. அப்போது “அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கும்படி உத்தரவிட முடியாது. இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பில் கூறியுள்ளது போல தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று கூறிவிட்டது. 

தீர்ப்பைப் கேள்விப்பட்டதும் அ.தி.மு.க.வின் முக்கியப்புள்ளிகள், ‘குக்கரு மக்கராயிடுச்சுடா சாமி. இந்த சின்னத்தை வெச்சுக்கிட்டுதானே இவ்வளவு சீன் போட்டுட்டு இருந்தாரு, இப்போ சுப்ரீம் கோர்ட்டே கையை விரிச்சுடுச்சு. இனி இரட்டை இலையை வேக வைப்பேன், கருக வைப்பேன்! அப்படின்னு டயலாக் விட்டு திமிரு காட்ட முடியாது. சின்னம் தொலைஞ்சதோடு சேர்த்து தினகரனின் வெற்றியும் தொலைஞ்சு போச்சு போ.” என்று பஞ்ச் அடித்தனர்.

 

தீர்ப்பும், அது குறித்து அ.தி.மு.க.வின் கமெண்ட்ஸும் தினகரனின் காதுகளுக்குப் போக, “இது ஒண்ணும் இறுதி தீர்ப்பில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக, இன்னும் நான்கு வாரத்தில் தீர்ப்பு வரும் என எதிர்ப்பார்க்கிறோம். தீர்ப்பு வர தாமதமானால், வரும் தேர்தலில் நாங்கள் கேட்கும் சின்னத்தை தேர்தல் கமிஷன் கொடுத்துதான் ஆக வேண்டும்.” என்று கள்ளக்குறிச்சியில் வெளியில் கருத்துக் கூறினார்.  

பின் அறையில் தன் நிர்வாகிகளை சந்தித்தபோது, ‘என்ன தலைவரே தீர்ப்பு இப்படியாகிடுச்சே?’  என்று அவர்கள் வருந்தியபோது...”என்னய்யா சின்னக்குழந்தை மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க? குக்கர் சின்னத்தை என்ன நாம காலங்காலமாவா வெச்சிருக்கோம்! இது என்ன அம்மாவோட சின்னம்மா இல்ல சின்னம்மா கொண்டாந்ததா? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல யதேச்சையா கிடைச்சது. 

குக்கர் போனா போகட்டும், சின்னத்தை பார்த்து மக்கள் ஓட்டு போடுறது மலையேறி போச்சு. மக்கள் வேட்பாளரையும், தலைவரையும், கட்சியையும் கவனிச்சுதான் ஓட்டுப்போடுறாங்க. அதனாலதான் குக்கர்ட்ட இரட்டை இலை தோத்துச்சு. மக்கள் செல்வாக்கு நமக்கு இருக்குறப்ப சின்னத்தை பார்த்து ஏன் கவலைப்படணும்?  குக்கர் இல்லேன்னா என்ன குடியா முழுகி போயிடும்? நாய், பேயின்னு எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அந்தாளுங்களை (அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளை) விரட்டி விரட்டி வேட்டையாடி தோக்கடிப்பேன். அந்த வெறியும், நம்பிக்கையும் எனக்கு இருக்குது. அதனால சின்னத்துக்காக கவலை. வேண்டாம். 

ஏன்டா இவ்வளவு பேசுறவன் ஏன் இரட்டை இலை சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு போயி தவம் கிடக்கிறான்? அப்படின்னு நீங்க நினைக்கலாம். அந்த சின்னத்தை நான் பறிக்க நினைக்கிறது, அந்த கோஷ்டியோட கர்வத்தை அடக்கத்தான். தலைவரும், அம்மாவும் ஏந்திய சின்னம் தங்களோட கொடியில இருக்கப்போயிதானே இவ்வளவு ஆட்டம் போடுறாங்க. அதை விடக்கூடாது.” என்று நரம்பு புடைக்க பேச, சுற்றி நின்ற நிர்வாகிகள் ஏக உற்சாகமாகிவிட்டனராம். இந்த தகவல் அப்படியே ஆளும் அணியின் காதுகளுக்குப் போக, ‘ம்ம்ம்ம்ம்முடியல!’ என்றாகிவிட்டார்கள்.