அதிமுக – பாஜக இடையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல் அமைச்சர்கள் மட்டும் அல்லாமல் அதிமுக நிர்வாகிகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட அதிமுக – பாஜக கூட்டணி கடந்த வேலூர் தேர்தல் வரை சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. வேலூரில் வேட்பாளராக ஏசி சண்முகத்தை அதிமுக அறிவித்தது. அதற்கு வெளிப்படையாக பாஜக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் அவருக்காக அந்த தொகுதியில் பாஜகவினர் பணியாற்றினர்.

இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி, நாங்குநேரிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரி காமராஜர் நகரிலும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. நாங்குநேரியில் போட்டியிட பாஜக விரும்பியது. ஆனால் அது குறித்த பேச்சுவார்த்தைக்கு கூட அதிமுக தலைமை இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி காமராஜ் நகரில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டது.

ஆனால், அந்த தொகுதியை என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கியது அதிமுக. இப்படி நாங்குநேரி மற்றும் காமராஜ் நகர் தொகுதியில் தங்கள் விருப்பம் நிறைவேறவில்லையே என்கிற எரிச்சல் பாஜக நிர்வாகிகளுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது வரை இந்த இடைத்தேர்தல்களில் பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறது. மேலும் இடைத்தேர்தல் பணிகளிலும் பாஜகவினர் அதிமுகவோடு இணையவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்றார். ஆனால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனே இடைத்தேர்தல் ஆதரவு குறித்து டெல்லி மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று கூறியுள்ளார். இதன் மூலமாக அதிமுக – பாஜக கூட்டணியில் லடாய் ஆரம்பமாகியுள்ளது என்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவுடன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக அதிமுக செயல்பட்டுள்ளதாக பாஜகவிற்கு டென்சன் ஏற்பட்டுள்ளது.

மேலும் விஜயகாந்தை நேரில் சந்தித்த அமைச்சர்கள் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இதனால் விரைவில் இந்த லடாய் மோதலாக முடிய வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்தால் தான் தமிழகத்தில் வளர முடியும் என்று டெல்லிக்கு பாஜக தரப்பில் இருந்து தகவல் சென்றுள்ளதாகவும் கூறுகிறார்கள்.