சமூகநீதியைச் சாய்க்க சதி.. பாஜக அரசின் நாடகம் அம்பலம்.. கொதிக்கும் வைகோ..!
இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் சதிகளை முறியடிக்க அரசியல் கட்சிகளும், சமூக நீதி இயக்கங்களும் போராடுவோம் என்று அறிவித்த உடன் ஒன்றிய பாஜக அரசு பின்வாங்கி இருக்கிறது என வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு (UGC - University Grants Commission) வெளியிட்டிருக்கிறது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளின் பணியிடங்களை இட ஒதுக்கீடு முறையில் நிரப்புவதற்கு பொதுவான தடை இருப்பதாகவும், இந்தக் காலிப் பணியிடங்களை பொது நலன் கருதி தொடர அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Vaiko vs Governor Ravi : ஆளுநர் ரவிக்கு வரலாற்று அறிவு இல்லை.. மன்னிப்பு கேட்க வேண்டும்- சீறும் வைகோ
குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, அந்தப் பணியிடத்தை நிரப்ப போதுமான விண்ணப்பங்களோ, தகுதியான ஆட்களோ கிடைக்காத பட்சத்தில், அந்தப் பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்யலாம் என சமூகநீதிக் கோட்பாட்டையே நீர்த்துப் போகும் வகையில் பரிந்துரைத்து இருக்கிறது. அதாவது, “ஓ.பி.சி., எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்களை நிரப்ப போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையெனில், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு மாற்றி அதில் தகுதியானவர்களை கொண்டு நிரப்பலாம்!” என தெரிவித்திருப்பதுதான் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
யூ.ஜி.சியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது. இன்று, ஒன்றிய அரசின் 45 பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7,000 பேராசிரியர் பணியிடங்களில், 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7.1 விழுக்காடு தலித், 1.6 விழுக்காடு பழங்குடியினர் மற்றும் 4.5 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக-ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன. இதனால் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையும் படிங்க: நீலகிரி மக்களவை தொகுதி.. ஆ.ராசாவை வீழ்த்த பாஜக தேசிய தலைமை களமிறக்கப்போகும் வேட்பாளர் யார் தெரியுமா?
இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் சதிகளை முறியடிக்க அரசியல் கட்சிகளும், சமூக நீதி இயக்கங்களும் போராடுவோம் என்று அறிவித்த உடன் ஒன்றிய பாஜக அரசு பின்வாங்கி இருக்கிறது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகமும், யுஜிசியும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மழுப்பலான அறிக்கையை வெளியிட்டுள்ளன. ஏற்கனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி, சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைக்கின்ற வகையில் அதைச் செயல்படுத்தி இருக்கிறது பாஜக அரசு. அதன் நீட்சியாகவே யுஜிசி மூலம் ஆழம் பார்ப்பதற்கு இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு, நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பின் வாங்கி இருக்கிறது. இதன் மூலம் பாஜக அரசின் நாடகம் அம்பலம் ஆகிவிட்டது. சமூக நீதியைச் சாய்க்கத் தொடர்ந்து முனைந்து வரும் பாஜக அரசை வீழ்த்தினால்தான் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என வைகோ கூறியுள்ளார்.